தொழில் அதிபரால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் – மரண வாக்குமூலம்!

தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காமாபுரத்தை சேர்ந்த 37 வயது பெண். இவருக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாயார் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நவநீதன் ஆவார்.

சம்பவத்தன்று இளம்பெண் தான் வேலைபார்க்கும் டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் மருத்துவ செலவுக்கு பணம் வாங்குவதற்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில், உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அங்கு அவரிடம், தனக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டார்.

ஆனால் உரிமையாளர் கொடுக்க மறுக்கவே வேதனை அடைந்த இளம்பெண் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனடியாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கணவரை பிரிந்து எனது தாயார் வீட்டில் வசித்து வந்தேன். மேலும் அந்த பகுதியில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நவநீதன் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

மேலும் பல முறை என்னை பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன். இதுகுறித்து அவரிடம் தெரிவித்தபோது கருவை கலைக்க சொன்னார். இதுபோன்று 6 முறை கர்ப்பத்தை கலைத்துள்ளேன். இந்த விஷயம் அனைத்து நான் வேலைபார்த்த நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவி அகிலாவுக்கு தெரியும்.

ஆனால் அவரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நான் 6 முறை கர்ப்பத்தை கலைத்ததால் எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு மருத்துவ செலவுக்கு பணம் கேட்பதற்காக கோவையில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்தேன். அப்போது அவரும், அவரது மனைவியும் என்னை தனியாக வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

அங்குள்ள குளியலறையில் வைத்து என் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டனர்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். தங்களை போலீஸ் தேடுவதை அறிந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!