மகளை கொன்று வங்கி ஊழியர் மனைவியுடன் விபரீதமுடிவு!

தக்கலை அருகே மகளை கொன்று வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வங்கி ஊழியர்

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி ஒற்றை தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 51). இவர் மார்த்தாண்டம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரோகிணி பிரியா (45), நாகர்கோவிலில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்தார். இந்த தம்பதியின் ஒரே மகள் அர்ச்சனா (13). இவர் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

போனை எடுக்காததால்…

ரமேஷின் வீட்டின் அருகில் அவருடைய அண்ணன் மகாத்மா, அக்காள் லதா ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் ஒரே காம்பவுண்டில் வசித்தனர். ஆனால் குடும்ப தகராறு இருந்து வந்ததால் அவர்களுக்கிடையே சரிவர பேச்சு இல்லை என்று கூறப்படுகிறது. ரமேஷின் மற்றொரு அண்ணன் சுவாமி என்பவர் மார்த்தாண்டத்தில் நகை கடை நடத்தி வருகிறார்.

ரோகிணி பிரியாவின் அக்காள் மேகலா நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் மேகலா நேற்று காலையில் ரோகிணி பிரியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அந்த போனை அவர் எடுக்கவில்லை. பின்னர் அவரது கணவர் ரமேசுக்கு போன் செய்தும் எடுக்காததால் மேகலாவுக்கு பதற்றம் உருவானது. விபரீதம் ஏதும் நடந்திருக்குமோ? என நினைத்து ரமேஷின் அண்ணன் மகாத்மாவை தொடர்பு கொண்டு மேகலா பேசியுள்ளார். அப்போது நடந்த விவரத்தை கூறிய அவர் உடனடியாக ரமேஷ் வீட்டுக்கு சென்று பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

வீட்டில் 3 பிணங்கள்

இதனை தொடர்ந்து அங்கு சென்ற மகாத்மாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது திறந்து கிடந்த வீட்டிற்குள் அங்குள்ள ஒரு அறையில் ஒரே சேலையில் ரமேசும், ரோகிணி பிரியாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். கட்டிலில் இறந்த நிலையில் அர்ச்சனா கிடந்தார். 3 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுத அவர் உடனே அக்கம் பக்கத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய தம்பதி உடல்களையும், கட்டிலில் இறந்து கிடந்த அர்ச்சனா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கடிதம் சிக்கியது

சாவதற்கு முன்பு ரமேஷ் ஏதேனும் கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா? என போலீசார் அறையில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ரமேசும், ரோகிணி பிரியாவும் சேர்ந்து எழுதியது போல் இருந்துள்ளது. அதாவது, அவர்களுடைய சொத்து யாருக்கு என்பது பற்றிய விவரம் மற்றும் எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என்பது பற்றிய தகவலும் எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மகளை கொன்று தற்கொலை

பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரமேசும், ரோகிணி பிரியாவும் ஏதோ மனவேதனையில் அர்ச்சனாவுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு ஒரே சேலையில் இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என தெரியவந்தது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!