கர்ப்பிணியை 13 கி.மீ டோலி கட்டி தூக்கி சென்ற பரிதாபம்!

சாலை வசதி இல்லாததால் சாந்தியை ஆர்லா ஆஸ்பத்திரிக்கு 13 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கி சென்றனர். அங்கிருந்து நர்ச்சிபட்டணம், அனகாபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜ் மாவட்டம், கோயூர் மண்டலத்தில் ஜாஜிலபண்டா பகுதி உள்ளது. மலைப் பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து ஆர்லா பகுதி மருத்துவமனைக்கு செல்ல 13 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை.

மலை கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிகமாக சாலையை சீரமைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் சீரமைக்கப்பட்ட சாலை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு டோலி கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் ஜாஜில பண்டாவை சேர்ந்தவர் சாந்தி. நிறைமாத கர்ப்பிணியான சாந்திக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் சாந்தியை ஆர்லா ஆஸ்பத்திரிக்கு 13 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கி சென்றனர். அங்கிருந்து நர்ச்சிபட்டணம், அனகாபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக மீண்டும் விசாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அலைக்கழித்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் விசாகப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சாந்தியை பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு அதிகாலை 3 மணி அளவில் சாந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் கர்ப்பிணியை டோலிக்கட்டி தூக்கி சென்ற வீடியோ வைரலாக பரவியது.

இதையடுத்து ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கலெக்டர் மற்றும் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் தற்போதாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!