பாடகர் கேகேவுக்கு இதை செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – டாக்டர்!

பாடகர் கேகேவுக்கு சரியான நேரத்தில் சிபிஆர் செய்திருந்தால் அவரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார்.


பிரபல பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் எனும் கேகே கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. கேகே மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

கேகேவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை செய்த டாக்டர் கூறியிருப்பதாவது,

கேகே இதயத்தின் இடப்பக்க தமனியில் 80 சதவீதம் அடைப்பு இருந்தது. மேலும் பிற தமனிகளிலும் அடைப்பு இருந்தது. ஆனால் எந்த தமனியிலும் 100 சதவீத அடைப்பு இல்லை.

அவருக்கு பலகாலமாக இதய பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால் அது அவருக்கே தெரியவில்லை. மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது அவர் நடந்திருக்கிறார், மேலும் கூட்டத்துடன் சேர்ந்து டான்ஸும் ஆடியிருக்கிறார். அதில் தான் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அவர் சுயநினைவிழந்திருக்கிறார். உடனே அவருக்கு சிபிஆர் கொடுக்கப்பட்டிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றார்.

டாக்டர் தெரிவித்ததை பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் ரசிகர்களுக்கு அவர் நினைவு வந்துவிட்டது. ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்ட புனீத்தை காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனீத் மாரடைப்பால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு சரியான நேரத்தில் சிபிஆர் கொடுக்கப்பட்டிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று அப்பொழுது பேச்சு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!