மாயமான விமானம் மலையில் மோதி விபத்து – பயணிகளின் நிலை என்ன..?

நேபாளத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது.


விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல் போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா? விமானத்தின் நிலை என்ன? என்பது குறித்து மலைப்பகுதியில் நேபாள ராணுவம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், மாயமான விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடந்துள்ளன. இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது.

இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவை காத்மண்டுவுக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ பகுதியில், நேபாள ராணுவ வீரர்கள் 15 பேர் அடங்கிய குழு உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. விபத்து பகுதி 14,500 அடி உயரத்தில் உள்ளது.

ராணுவ குழு 11 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளது என நேபாள ராணுவம் அதெரிவித்து உள்ளது. இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதீந்திரா மணி பொக்ரெல் கூறும்போது, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகிக்கிறோம். இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என தொடக்க கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!