உயிரிழந்த தோழியின் ரத்தத்தை உடலில் பூசி உயிர் பிழைத்த பள்ளிச்சிறுமி!

டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் 4-ம் வகுப்பில் இருந்த பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரே வகுப்பில் இருந்த 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இதனிடையே, இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டின் போது ஒரு பள்ளிச்சிறுமி சாதூரியமாக செயல்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 4-ம் வகுப்புக்குள் துப்பாக்கியுடன் குற்றவாளி சல்வடொர் நுழைந்து கண்ணில் பட்ட குழந்தைகளை சுட்டுள்ளான். அப்போது, வகுப்புக்குள் இருந்த மிஹா செரில்லொ (11 வயது) உடனடியாக தரையில் படுத்துள்ளார்.

சல்வடொர் துப்பாக்கியால் சுட்டதில் மிஹாவின் தோழிகள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துள்ளனர். தொடர்ந்து சல்வடொர் துப்பாக்கியால் சுட்டதில் மிஹாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வலியை பொறுத்துக்கொண்டு உயிரிழந்த தனது தோழியின் உடலில் இருந்த ரத்தத்தை மிஹா தனது உடலிலும், உடையிலும் பூசியுள்ளார். இதனை தொடர்ந்து மிஹா உயிரிழந்தது போல அசைவின்றி தரையில் படுத்துக்கிடந்துள்ளார்.

இதனால், வகுப்பறையில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக கருதி குற்றவாளி சல்வடொர் வகுப்பறையில் இருந்து வெளியேறியுள்ளான். சல்வடொரை சுட்டுவீழ்த்திய பின் வகுப்பறைக்குள் காயம் மற்றும் அதிர்ச்சியுடன் படுத்திருந்த மிஹாவை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ள மிஹாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூட்டின்போது சாதூரியமாக செயல்பட்டு உயிர் பிழைத்த 11 வயது சிறுமியின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!