பெண் பணியாளர் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

கடன் பிரச்சினையில் அவினாசி பேரூராட்சி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராயம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பரிமளா (வயது 30). இவர்களுக்கு தட்சின் (14) என்ற மகனும் தேவதர்சினி (12) என்ற மகளும் உள்ளனர். பரிமளா அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் கொசு ஒழிப்புப்பணி ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பரிமளா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது பரிமளா அப்பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனை அவரால் அடைக்க முடியவில்லை.தனசேகர் கடனை திருப்பி தருமாறு அவினாசி பேரூராட்சி அலுவலகத்திற்கும், பரிமளா வீட்டிற்கும் சென்று கேட்டுள்ளார்.

அப்போது பரிமளாவை தனசேகர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரிமளா தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் பரிமளாவின் கணவர், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பரிமளா தற்கொலைக்கு காரணமான நிதி நிறுவனத்தைச் சேர்ந்த தனசேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவினாசி அரசு மருத்துவமனை எதிரில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பரிமளாவின் கணவர் சந்திரன் கூறும்போது ,எங்களது குடும்ப செலவுக்காக ராயம்பாளையத்தை சேர்ந்த தனசேகரிடம் (31) வாங்கிய கடன் தொகையில் ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டோம். மீதி பணத்தை ஒரு வாரத்திற்குள் தந்துவிடுவதாக கூறினோம். ஆனால் அவரும், அவரது தாய் பூவாத்தாளும் எனது மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று உடனே பணம் கொடுக்க வேண்டும் என்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.சாதி பெயரை கூறியும் அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மனம் உடைந்த எனது மனைவி தற்கொலை செய்துகொண்டார். எனவே எனது மனைவி தற்கொலைக்கு காரணமான தனசேகரை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம். மேலும் எனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்றார்.

அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக தனசேகரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் தனசேகரின் தாய் பூவாத்தாளையும் கைது செய்ய வேண்டும். அதுவரை பரிமளாவின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி பரிமளாவின் கணவர் மற்றும் உறவினர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!