தந்தையின் இறுதி சடங்கில் 2 மாத குழந்தை… நெஞ்சை உருக்கும் புகைப்படம்!

உக்ரைன் போரில் உயிரிழந்த விமானியான தந்தையின் இறுதி சடங்கில் 2 மாத குழந்தை கலந்து கொண்ட நெஞ்சை உருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

கீவ், உக்ரைன் நாட்டில் ரஷியா மேற்கொண்ட போரானது 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். வீரர்கள் தவிர, பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என பலதரப்பினரும் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் சர்வதேச அமைப்புகள், நாடுகளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

போரை நிறுத்த இரு நாடுகளும் தயாராக இல்லை. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் போரால் ஏற்படும் துயரங்களை பற்றிய காட்சிகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் பாதுகாப்பு படையை சேர்ந்த போர் விமானி செர்ஹை பார்கோமெங்கோ (வயது 25) என்பவர் தீவிரமுடன் செயல்பட்டு உள்ளார்.

அவர், 20 பீரங்கிகள், 50 பி.பி.எம். எனப்படும் பெரிய வாகனங்கள், 55 கார்கள், 20 எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ரஷியர்களை போரில் அழித்துள்ளார்.
கடைசியாக 14ந்தேதி எதிரி படைகளின் தாக்குதலில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் செர்ஹை நாட்டுக்காக உயிர்தியாகம் செய்துள்ளார்.

அவருக்கு பிறந்து 2 மாதம் ஆன ஆண் குழந்தை உள்ளது. செர்ஹையின் இறுதி சடங்கு நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் அவரது இறுதி சடங்கு நடக்கிறது. அந்த ஆலயத்திற்கு மேலே வின்னிட்சியா நகரில் மிக்-21 ரக போர் விமானங்கள் பறந்து செல்கின்றன.

இளம் விமானியின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த ஜெட் விமானங்கள் இதுபோன்று பறந்து செல்கின்றன. இதேபோன்று மற்றொரு புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில், வீரர் ஒருவர் பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தை ஒன்றை சுமந்தபடி செர்ஹை முன் நிற்கிறார். இந்த காட்சி காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!