ஜிம் மாஸ்டரை அடித்துக் கொன்ற 3 பேர்- நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில் உடற்பயிற்சியாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர் .

திருநெல்வேலி உடற்பயிற்சியாளர் நெல்லை ரெட்டியார்பட்டி ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது 27). இவர் ரெட்டியார்பட்டியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக (ஜிம் மாஸ்டர்) இருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பரான கொம்பையா என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் 2 பேரும் அருகில் உள்ள மைதானத்துக்கு சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் சுப்பிரமணியனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிலர் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கியதாக கூறினார்கள். ஆனால் அங்கு சேர்த்த சிறிது நேரத்திலேயே சுப்பிரமணியன் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

சுப்பிரமணியனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தவர்களிடம் விபத்து நடந்த விதம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சுப்பிரமணியன் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ரெட்டியார்பட்டி மைதானம் பகுதியில் சுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு அதே பகுதியை சேர்ந்த சிவநம்பி, முருகன், செல்வம் உள்பட 4 பேர் ஏற்கனவே மது குடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து சுப்பிரமணியன், அங்கிருந்த சிவநம்பியிடம் இங்கு எப்படி வந்து நீங்கள் மதுகுடிக்கலாம் என்று கேட்டு உள்ளார்.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சிவநம்பி தரப்பினர் சுப்பிரமணியனை பிடித்து தள்ளினர்.

பின்னர் சுப்பிரமணியனை 3 பேர் சேர்ந்து சரமாரியாக மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கம் அடைந்த சுப்பிரமணியன் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்த சிவநம்பி மற்றும் அவரது நண்பர்கள் சுப்பிரமணியனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மதுபோதையில் இருந்ததால் அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவநம்பி உள்பட 3 பேரை கைது செய்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!