1 மணி நேரத்தில் 206 சிறுநீரக கற்களை அகற்றிய மருத்துவர்கள்!

தெலுங்கானாவில் சிகிச்சை பெற்ற நபரிடம் இருந்து 206 சிறுநீரக கற்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். ஐதராபாத், தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் வீரமல்லா ராமலட்சுமையா (வயது 56).

இவர் ஐதராபாத் நகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்று கடந்த 6 மாதங்களாக இடுப்புக்கு சற்று மேலே இடது புறத்தில் கடுமையான வலி உள்ளது என கூறியுள்ளார். கோடை காலத்தில் வெப்பநிலை உயர்ந்து இந்த வலி அதிகரித்து உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், மருத்துவர்கள் அவரது கடந்தகால மருத்துவ குறிப்புகளை வாங்கி பார்த்துள்ளனர். அதில், கடந்த காலங்களில் உள்ளூரில் உள்ள சுகாதார பயிற்சியாளர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சில மருந்துகளை வாங்கி ராமலட்சுமையா சாப்பிட்டுள்ளார். அது குறுகிய காலத்திற்கு நிவாரணம் தந்துள்ளது. ஆனால் தொடர்ந்து வலி ஏற்பட்டு அன்றாட வேலைகளில் பாதிப்பு ஏற்படுத்தியது.

இதன்பின்னர் மருத்துவர்கள் அவருக்கு ஆரம்பகட்ட பரிசோதனைகள் செய்துள்ளனர். அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில், அவரது இடதுபுறம் சிறுநீரக கற்கள் இருந்துள்ளன. இதனை சி.டி. கப் ஸ்கேனும் உறுதி செய்தது. இதன்பின்பு ராமலட்சுமையாவுக்கு கவுன்சிலிங் வழங்கி பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையில் அனைத்து கற்களும் அகற்றப்பட்டன.

இதன்படி, 206 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். கோடை காலங்களில், உயர்ந்து வரும் வெப்பநிலையால், பலருக்கும் நீரிழப்பு ஏற்படுகிறது. இது முடிவில் சிறுநீரகங்களில் கற்களாக உருமாறி விடுகிறது. அதனால், அதிக அளவு நீர் அருந்த வேண்டும் என்றும் சாத்தியப்பட்டால் இளநீர் அருந்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!