கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் திடீர் மாயம்!

மணமேல்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்கள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உலகுசுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் குமாரராஜா (வயது 44), மோகனசுந்தரம் (42), யுவராஜ் (39), ராஜ் (30) ஆகிய 4 மீனவர்கள், 4 நாட்களுக்கு முன்பு கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க நேற்று காலை நாட்டுப்படகில் சென்றனர்.

சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நண்டு வலையை எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள், நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சக மீனவர்களின் உதவியோடு 2 படகுகளில் கடலுக்குள் தேடிச் சென்றனர்.

அங்கு வலை விரித்திருந்த பகுதிகளில் தேடிப்பார்த்தும் மீனவர்கள் மற்றும் படகை காணாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் ஏமாற்றத்துடன் நேற்று இரவு கரை திரும்பினர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் கடலோர காவல்படையினர் சக மீனவர்களின் உதவியோடு 20 நாட்டுப்படகுகளில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகுடன் கடலுக்குள் தேடிச் சென்றுள்ளனர்.

நேற்று காலை முதலே கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், நான்கு மீனவர்களும் காற்றின் வேகத்தில் வேறு எங்காவது இழுத்துச் செல்லப்பட்டனரா, அல்லது படகின் எந்திரம் பழுதாகி எங்காவது நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா? என்ற கோணத்தில் கடலோரக் காவல்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

மாயமான மீனவர்களில் குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ் ஆகிய மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்கள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!