கடிக்க வந்த நாயை தாக்கிய ஓட்டல் உரிமையாளர்… பின் நடந்த விபரீதம்!

கீரமங்கலத்தில் கடிக்க வந்த நாயை விரட்டியதால் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த ஓட்டல் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். புதுக்கோட்டை கீரமங்கலம்: ஓட்டல் உரிமையாளர் சாவு மேற்பனைக்காடு குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் அருள் (வயது 38). கீரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்ற போது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றுள்ளது. மோட்டார் சைக்கிள் நின்ற இடத்தில் கிடந்த நாய் அருளை கடிக்க வந்ததால் அவர் நாயை தாக்கியுள்ளார்.

இதனால் தகராறு ஏற்பட்டு அருளை வேம்பங்குடி மேற்கு அண்ணாத்துரை மகன் தினேஷ் (30), கீரமங்கலம் தர்மர் கோவில் தெரு அண்ணாத்துரை மகன் மதன் என்கிற சுரேஷ்குமார் (22) ஆகிய இருவரும் தாக்கியதில் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அருள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருளின் மனைவி சுதா (35) கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் இதையடுத்து உயிரிழந்த அருளின் உடல் நேற்று இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது அருள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து குறிஞ்சி நகரில் உறவினர்கள் அருள் உடலை ஏற்றி சென்ற அமரர் ஊர்தியை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!