இருகைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் சாதனை படைத்த இளைஞர்..!


இருகைகளும் இழந்தவராக இருந்தாலும் நம்பிக்கை ஒன்றையே மூலதனமாக்கி சாதனை படைத்த வாலிபரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை அறிந்து கொள்வோமா?

“அவன் செத்துப்போனதும் எனக்கு ஒரு கையே ஒடைஞ்சிப்போனா மாதிரி ஆயிருச்சுடா, எத்தனை ஒத்தாசையா இருந்தான், இந்த குடும்பத்துக்கு?, இனி அவனில்லாமே நம்ம கதி என்ன ஆகுமோ..?ன்னு நெனைச்சுப்பாக்கவே பயமா இருக்குடா..,” குடும்பத்தின் மூத்த மகனை இழந்த வேதனையில் சில தந்தைகள் இளைய மகனிடம் இப்படி புலம்புவதுண்டு.

நமக்கு உதவியாக இருந்த இன்னொருவரின் உபரிக்கை நம்மைவிட்டுப் போய்விட்டாலே நமக்கு இவ்வளவு துயரமும், கவலையும் ஏற்படும் வேளையில் தனது இருகைகளையும் இழந்தவர்களின் தவிப்பும் வேதனையும் எப்படி இருக்கும்? என்பதை அவ்வளவு எளிதாக விளக்கிவிட முடியாது.

ஆனால், இருகை போனாலும் மூன்றாம் கையாக இருக்கும் நம்பிக்கையை வைத்து சாதித்து காட்டுவேன் என்று வைராக்கியத்தை தனது சிறுவயதிலேயே ஏற்படுத்தி கொண்ட இந்த வாலிபர் மற்றவர்களுக்கும் அதே நம்பிக்கையை விதைக்கும் விருட்சமாக வாழ்ந்து வருகிறார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள சஹரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷிதிஸ் அனேஜா. எட்டுவயது சிறுவனாக இருந்தபோது ஒரு விபத்தில் இருகைகளையும் இழந்தார். மிகுந்த தன்னம்பிகையுடன் நன்றாக படித்து, பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை நிறைவுசெய்தார். இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பட்டயப் படிப்பையும் முடித்து தற்போது பிரபல கொக்கோ கோலா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கைகள் இல்லாமல் போனது வாழ்க்கையின் எந்த மகிழ்ச்சிக்கும் தடையே அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கால்பந்தாட்டம், கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்வது, பேனாவால் எழுதுவது, ஸ்மார்ட் போன்களை இயக்குவது, கேமராவின் மூலம் இயற்கை காட்சிகளை படம்பிடிப்பது போன்ற சராசரி வாலிப வாழ்க்கையை எவ்வித வலியும் உணராமல் வாழ்ந்துவரும் கிஷிதிஸ் அனேஜாவின் தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் ஒரு ‘லைக்’ போடலாமே.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!