பெற்றோர் இணைந்து வாழவேண்டும்… கடிதம் எழுதிவைத்து பிளஸ்-2 மாணவர் விபரீதமுடிவு!

ராசிபுரம் அருகே பிரிந்து வாழும் பெற்றோர் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 45). டிரைவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா (40). இவர்களுக்கு நர்மதா என்ற மகளும், தருண் என்ற மகனும் உள்ளனர். தருண் பிளஸ்-2 படித்து வருகிறார்.

கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது மேகலா அவையம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். மாணவன் தருண் அவரது தாய் மேகலா உடன் வசித்து வருகிறார். இன்று மாணவனுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

தாய் தந்தையர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது மாணவனுக்கு மன அழுத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் எனது சாவில் ஆவது பெற்றோர் இணைந்து வாழவேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று இரவு அவனது தாய் மேகலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலையில் அவனது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது மாணவன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பேளுக்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!