புதினின் ரகசிய காதலி, முன்னாள் மனைவிக்கு நெருக்ககடி கொடுக்கும் இங்கிலாந்து!

ரஷிய அதிபர் புதினின் ரகசிய காதலி, முன்னாள் மனைவி மீது இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து உள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷிய படைகள் 2 மாதங்களுக்கும் கூடுதலாக தீவிர போரில் ஈடுபட்டு வருகின்றன. போரை நிறுத்த பல நாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால், போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இதுதவிர, புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து வருகிறது. இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய காதலி, முன்னாள் மனைவி மீது இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று ஓய்வு பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா (வயது 38), ரஷிய அதிபர் புதினின் மனைவி என பரவலாக நம்பப்படுகிறது. புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் புதின் இதுவரை வெளியிடவில்லை.

புதினின் ரகசிய காதலி, நேசனல் மீடியா குரூப் என்ற ரஷியாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் வாரிய தலைவராக இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் யூரோ மதிப்பிலான சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. புதின் மற்றும் கபேவா ஜோடி ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் பல்வேறு தருணங்களில் வெளிவந்துள்ளன.

ரஷியாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி அமைத்திருந்த புலனாய்வு அமைப்புகளின் கூற்றுப்படி, ரஷியாவை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த வர்த்தக தலைவர்கள் பலர் அன்பளிப்பு என்ற வகையில், வீடு, பணம் மற்றும் பிற சொத்துகளை கபேவாவின் குடும்பத்தினருக்கு அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு, தனது ரகசிய காதலி கபேவாவை, சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் வசமுள்ள பகுதிக்கு புதின் அனுப்பி வைத்துள்ளார் என நம்பப்படுகிறது.

அலினாவை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும்படி கோரிக்கைகள் வலுத்தன. இந்த சூழலில், புதினின் ரகசிய காதலியான அலினா மற்றும் புதினின் முன்னாள் மனைவியான லுட்மிலா ஆக்ரெத்னயா ஆகியோருக்கு எதிராக இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து உள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ் கூறும்போது, புதினின் குடும்பம், பால்யபருவ நண்பர்கள் மற்றும் புதின் அரசாட்சியில் பலன் பெற்ற நபர்கள், பதிலுக்கு புதினின் வாழ்க்கை முறைக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆகியோர் மீது புதிய தடைகள் விதிக்கப்படுகின்றன என கூறியுள்ளார். புதினுக்கு உதவி செய்யும் அனைவர் மீதும் இங்கிலாந்து தொடர்ந்து தடைகளை விதிக்கும் என டிரஸ் கூறியுள்ளார்.

இதன்படி, ஓய்வு பெற்ற ஒலிம்பிக் வீராங்கனையான அலினாவுக்கு எதிராக இந்த தடை விதிக்கப்படுகிறது. இதேபோன்று, ரஷிய கூட்டமைப்பின் அதிபர் புதினின் முன்னாள் மனைவியான லுட்மிலாவுக்கு எதிராகவும் தடை விதிக்கப்படுகிறது.

புதினின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான இகோர் புதின் என்பவர் மீதும் தடை விதிக்கப்படுகிறது. ரஷிய தொழிலதிபரான இகோர், பெசெங்கா சர்வதேச கடல் துறைமுக இயக்குனராக இருந்து வருகிறார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!