கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவரை அடித்து விரட்டிய வீரப்பெண்!

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய லாரி டிரைவரை தனது சாதுரியத்தால் அடித்து துரத்திய பெண்ணின் செயலை அப்பகுதி மக்களும், போலீசாரும் பாராட்டி வருகின்றனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி ஜெயா.

குருமூர்த்தி தனது மனைவியுடன் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்.

மேலும் இவர் பாப்பம்பட்டி பல்லடம் நெடுஞ்சாலையில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் டீக்கடைக்கு சென்று விடுவதால் ஜெயா மட்டுமே வீட்டில் தனியாக இருப்பார்.

நேற்றும் குருமூர்த்தி வழக்கம்போல காலையில் டீக்கடைக்கு சென்று விட்டார். ஜெயா மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது ஒரு லாரி டிரைவர், குருமூர்த்தியின் வீட்டிற்கு வந்து ஜெயாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அதற்கு வெளியில் உள்ள பைப்பில் பிடித்து கொள்ளுமாறு அவர் கூறினார். இதையடுத்து லாரி டிரைவரும் தண்ணீரை பிடித்து சென்றார்.

ஜெயாவும் வீட்டிற்குள் சென்று சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது மீண்டும் அதே லாரி டிரைவர் ஜெயாவின் வீட்டிற்கு வந்து உப்பு வேண்டும் என கேட்டார்.

இதையடுத்து ஜெயா உப்பு எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற டிரைவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயாவின் கழுத்தில் வைத்தார்.

இதனால் ஜெயா அதிர்ச்சியானார். அப்போது லாரி டிரைவர் சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுத்துவிடுவேன் என மிரட்டினார்.

இதற்கிடையே சுதாரித்து கொண்ட ஜெயா, தனது ஒரு கையால் லாரி டிரைவரின் கத்தி இருந்த கையைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால், லாரி டிரைவரை சரமாரியாக தாக்கினார்.

இதனை சற்றும் எதிர்பாராத லாரி டிரைவர் வலி தாங்க முடியாமல் கத்தியையும், தனது செல்போன் மற்றும் லாரியையும் அந்த பகுதியிலேயே போட்டு தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து ஜெயா தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் தனது மனைவியை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் கொடுத்தார்.

போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவர் விட்டு சென்ற செல்போன், கத்தி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயாவை மிரட்டி நகை, பணம் நோக்கில் டிரைவர் செயல்பட்டாரா அல்லது எதற்காக மிரட்டினார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பொருட்களை ஏற்றுவதற்காக பல பகுதிகளில் இருந்து லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற லாரி டிரைவர்களிடமும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய லாரி டிரைவரை தனது சாதுரியத்தால் அடித்து துரத்திய பெண்ணின் இந்த செயலை அப்பகுதி மக்களும், போலீசாரும் பாராட்டி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!