போரில் கால்களை இழந்த காதலியை கரம்பிடித்த காதலன்..!

ஒக்சானாவை கரங்களில் ஏந்தி விக்டர் நடனமாடிய வீடியோ பார்ப்போரின் நெஞ்சை உருக்குகிறது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது போர் இன்று 72-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன் நாட்டின் லிசிசான்ஸ்க் பகுதியை சேர்ந்தவர் ஒக்சானா (வயது 23). இவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் விக்டர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இவர் தனது காதலன் விக்டர் உடன் லிசிசான்ஸ்க் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக ரஷிய ராணுவத்தின் கண்ணிவெடியில் ஒக்சானா கால் வைத்துள்ளார்.

கண்ணிவெடி வெடித்து சிதறியதில் ஒக்சானா தனது 2 கால்களையும் இடது கையில் 4 விரல்களையும் இழந்தார். இந்த வெடிவிபத்தில் அதிர்ஷ்வசமாக விக்டர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

செயற்கை கால் பொருத்துவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் ஒக்சானா. இந்த நிலையில் பல ஆண்டுகளாக ஒக்சானாவை காதலித்து வந்த விக்டர் அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

தனது காதலி கால்களை இழந்து தவிக்கும் நிலையில் இந்த திருமணம் அவருக்கு ஆறுதலை தரும் என விக்டர் முடிவு செய்துள்ளார். இதனை ஒக்சானாவிடம் விக்டர் தெரிவித்தபோது அவர் இன்பஅதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த திருமணத்திற்கு ஒக்சானா சம்மதம் தெரிவிக்க அவர்கள் திருமணம் ஒக்சானா சிகிச்சை எடுத்துவந்த மருத்துவமனையில் நடந்துள்ளது.

மருத்துவமனையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு இரு கால்களையும் இழந்த ஒக்சானாவை கரங்களில் ஏந்தி விக்டர் நடனமாடியுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவர்களுக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஒக்சானாவை கரங்களில் ஏந்தி விக்டர் நடனமாடிய வீடியோ பார்ப்போரின் நெஞ்சை உருக்குகிறது. இந்த வீடியோ உக்ரைன் அரசுக்கு சொந்தமான ஒரு டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!