திடீரென நெஞ்சுவலி- 55 பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட அரசு பஸ் டிரைவர்!

உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் பயணிகளை நடுவழியில் விடாமல் பஸ் நிலையம் வரை கொண்டு சென்று 55 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு அரசு பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லையில் இருந்து சாத்தான்குளம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சாத்தான்குளம் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பஸ்சை நெல்லை தாமிரபரணி பணிமனையை சேர்ந்த முருகேசபாண்டியன் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார்.

சாத்தான்குளம் அருகே கருங்கடல் பகுதியில் பஸ் வந்தபோது டிரைவர் முருகேசபாண்டியன் சாலை ஓரமாக பஸ்சை நிறுத்திவிட்டு கண்டக்டரிடம் தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். எனினும் பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்ததால் அவர்களின் நலன்கருதி உடல்நலம் குன்றியபோதும் பஸ்சை முருகேசபாண்டியன் தொடர்ந்து ஓட்டிச்சென்றார்.

சாத்தான்குளம் பஸ் நிலையத்திற்குள் அந்த பஸ் வந்தவுடன் அதிலிருந்து இறங்கிய முருகேசபாண்டியன் சற்று தள்ளாடியவாறு நடந்து சென்று அங்குள்ள நிழலில் நின்று கொண்டிருந்தார். அதனை பார்த்த கண்டக்டர் மற்றும் நேரக் காப்பாளர் ஆகியோர் முருகேசபாண்டியனை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சென்ற முருகேசபாண்டியன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் பயணிகளை நடுவழியில் விடாமல் பஸ் நிலையம் வரை கொண்டு சென்று 55 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்த டிரைவர் முருகேச பாண்டியன் உடலுக்கு பயணிகள், சக டிரைவர்கள், கண்டிரக்டர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!