கேரள இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.10 லட்சம் பறித்த நைஜீரிய வாலிபர்!

டேட்டிங் ஆப் மூலம் பழகி கேரள இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த நைஜீரிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓய்வு நேரத்தில் சமூக வலை தளங்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதில் டேட்டிங் ஆப் மூலம் இவர் சேட்டிங் செய்த போது நைஜீரிய நாட்டை சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (வயது 36) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

அந்த வாலிபர், கேரள பெண்ணுடன் நெருங்கி பழக தொடங்கினார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

இதன்பின்பு இளம்பெண்ணும் நைஜீரிய வாலிபர் எனுகா அரின்சி எபெனாவும் தங்கள் குடும்ப விபரங்களை பறிமாறி கொண்டனர். அப்போது எனுகா அரின்சி எபெனா விமானியாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், இந்தியா வரும்போது, அதனை இளம்பெண்ணுக்கு தருவாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

எனுகா அரின்சி எபெனாவின் வார்த்தையை நம்பிய இளம்பெண், அவரது வருகைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனுகா அரின்சி எபெனா இந்தியா வந்துள்ளதாக கேரள பெண்ணுக்கு தகவல் அனுப்பினார். மேலும் தான் ரூ. 1 கோடியே 50 லட்சம் பணம் கொண்டு வந்ததாகவும், அதனை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த பணத்தை வாங்க ரூ.10 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய கேரள பெண், நைஜீரியா வாலிபரின் வங்கி கணக்குக்கு ரூ.10 லட்சம் அனுப்பி உள்ளார்.

அதன்பின்பு கேரள பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்ட எனுகா அரின்சி எபெனா, இன்னும் கூடுதலாக ரூ.11 லட்சம் பணம் வேண்டும் எனவும், அதனை உடனே அனுப்பி தரும்படியும் கேட்டுள்ளார். இதனையும் நம்பிய இளம்பெண், அந்த பணத்தை அனுப்ப வங்கிக்கு சென்றுள்ளார்.

வங்கி அதிகாரிக்கு இதில் சந்தேகம் ஏற்படவே அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்த போது அவர் நைஜீரிய வாலிபர் பற்றிய தகவல்களை கூறியுள்ளார்.

போலீசாருக்கு இதில் சந்தேகம் ஏற்படவே அவர்கள் டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இதில் கேரள பெண் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் கேரள பெண்ணை ஏமாற்றிய வாலிபர் டெல்லி அருகே நொய்டாவில் தங்கி இருப்பதையும் கண்டுபிடித்தனர். இந்த தகவல்களை அறிந்த கேரள போலீசார் உடனே டெல்லிக்கு விரைந்து சென்றனர். அங்கு எனுகா அரின்சி எபெனா தங்கி இருந்த அறைக்கு அதிரடியாக சென்றனர். போலீசாரை கண்டதும் எனுகா அரின்சி எபெனா அங்கிருந்து தப்பி ஓடினார்.

அவரை கேரள போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கேரளா அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எனுகா அரின்சி எபெனா டெல்லியில் குடும்பத்துடன் தங்கி இருப்பதும், இதுபோல பலரையும் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை நேற்று ஆலப்புழா கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!