மாமர இலைகளில் 1,330 திருக்குறள் எழுதி ஆசிரியை சாதனை

1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்ய பயிற்சி எடுத்துவருகிறேன் என சாதனை படைத்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி தொட்டியம் அருகே உள்ள கோடியம்பாளையம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் அமுதா(வயது48). இவர் பாண்டிச்சேரியில் இருந்து கூகுள் மீட் வாயிலாக நடத்தப்பட்ட உலக சாதனையாளர்கள் போட்டியில் பங்கெடுத்தார்.

இதில் 30 மா மரத்தின் இலைகளில் 1,330 திருக்குறள்களையும் 20 மணிநேரத்தில் அமுதா எழுதி சாதனை படைத்தார். இதையடுத்து அவருக்கு பாண்டிச்சோரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் வெங்கடேசன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தமிழறிஞர்களும் அவரை வெகுவாக பாராட்டினர்.

இதுபற்றி ஆசிரியை அமுதா கூறும்போது, என் தந்தை ஒரு தமிழாசிரியர். நான் எம்.எஸ்.சி.( விலங்கியல்) பி.எட் முடித்துள்ளேன். எனது கணவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு ஒரே மகள். அவர் தற்போது என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.

சிறு வயதில் இருந்தே எதாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் கைக்கூடவில்லை. ஓய்வு நேரத்தில் இலையில் திருக்குறளை விளையாட்டாக இலைகளில் எழுதி பார்ப்பேன்.

இப்போது போட்டியில் கலந்து கொண்டு 20 மணிநேரம் தொடர்ச்சியாக எழுதி இருக்கிறேன். ஏற்கனவே திருக்குறளை கவிதை வடிவில் எளியமுறையில் எழுதி பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளேன். 200-க்கும் மேற்பட்ட திருக்குறள் மனப்பாடமாக தெரியும். 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்ய பயிற்சி எடுத்துவருகிறேன் என்றார்.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!