போரில் தாயை இழந்த 9 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!

உக்ரைன்-ரஷிய போரில் தாயை இழந்த 9 வயது சிறுமி எழுதிய கடிதம் கல்நெஞ்சமும் கரையும் வகையில் உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷிய போரில் உயிரிழந்த தாய்க்கு அவரது 9 வயது மகள் எழுதிய சோக கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், இந்த ஒட்டுமொத்த உலகிலும் சிறந்த தாய் நீங்கள். ஒருபோதும் உங்களை மறக்கமாட்டேன் என சிறுமி எழுதியுள்ளாள்.

உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கும் என நான் நினைக்கிறேன். சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருங்கள். என்னால் முடிந்தவரை நல்ல மனிதராக நான் இருப்பேன் என உறுதிமொழி அளித்துள்ள சிறுமி, அதனால் தானும் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்றும் தனது தாயை காண முடியும் என்றும் உருக்கமுடன் தெரிவித்துள்ளாள்.

இந்த பதிவானது உக்ரைன் உள்விவகார மந்திரியின் ஆலோசகர் ஆன்டன் கெராஷ்செங்கோ என்பவரால் பகிரப்பட்டு உள்ளது.

இதற்கு பலரும் பலவித விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். அதில் ஒருவர், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாய்தான் எல்லாமே. அந்த சிறுமியின் வலியை நான் உணர்கிறேன். தாயை இழந்தபோது, அந்த சிறுமி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மற்றொருவர், அந்த குழந்தையை தயவுசெய்து காப்பாற்றுங்கள். நல்லது செய்வதற்கான உயர்ந்த மனதைரியம் அந்த சிறுமியிடம் உள்ளது. தாயாரை இழந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை.

இந்த பதிவுடன் நின்று விடாமல், சிறுமியின் கல்வி மற்றும் அனைத்திற்கும் உங்களால் என்ன முடியுமோ அதனை செய்யுங்கள் என தெரிவித்து உள்ளார்.

ஆனால் பலரும் தயவு செய்து, இதுபோன்ற பதிவுகளை பகிராதீர்கள். இதனை எப்போது பார்க்கிறேனோ அல்லது படிக்கிறேனோ உணர்ச்சிவசப்பட்டு விடுகிறேன். உண்மையில் உதவியற்றவராக உணர்கிறேன். மணிக்கணக்காக அழுகிறேன் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!