அரசு ஆஸ்பத்திரியில் செல்போன், டார்ச் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம்!

ஆந்திரா முழுவதும் மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த அவல நிலை நடந்துள்ளது.

கர்னூல் மாவட்டம் ஆஸ்பாரிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் வசதியோ, இன்வெட்டர் வசதியோ இல்லாததால் டாக்டர் மற்றும் நர்சுகள் செல்போன் வெளிச்சத்தில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்தனர்.

பிரசவத்தில் இளம்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதேபோல் அணக்காபள்ளி மாவட்டம் நர்சிபட்டினம் மண்டலம் ராலிப்பேட்டை பகுதியை சேர்ந்த போத்திராஜ் மனைவி லட்சுமி. இவருக்கு கடந்த 6-ந் தேதி இரவு 2 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து மாடுகுல பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள் டார்ச்லைட் வெளிச்சத்தில் லட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர்.

பிரசவத்தில் லட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த ஆஸ்பத்திரியில் தினமும் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்சாரம் இல்லாததால் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கொசுக்களின் தொல்லையால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் இருட்டை பயன்படுத்தி குழந்தைகள் திருடு போகும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர்கள் தங்களது குழந்தைகளை தாங்களே பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் பிரசவித்த பெண்கள் தங்களது குழந்தைகள் திருடு போகாமல் இருக்க விடிய விடிய காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை ஆந்திரா முழுவதும் நிலவி வருகிறது.

எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்சார தட்டுப்பாட்டை போக்க ஜெனரேட்டர் மற்றும் இன்வெட்டர் வசதி செய்து கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக வெள்ளிக்கிழமை முழுவதும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!