பிரபல ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல் – விசாரணையில் பரபரப்பு!

வானூர் அருகே மதுகுடிப்பதாக அழைத்து சென்று பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோட்டக்குப்பம் போலீஸ் சரகம் நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. அவரது மகன் அபிஷேக் (வயது 23). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.

அபிஷேக் தற்போது கோட்டக்குப்பம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று மாலை போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் அபிஷேக் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுபற்றி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

அபிஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி துப்புதுலக்க மோப்பநாய் பிரீஸ்டி வரவழைக்கப்பட்டது. அது கோட்டக்குப்பம் போலீஸ் நிலையம் வழியாக அந்த பகுதியில் உள்ள காட்டுக்குள் சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. நேற்று மாலை அபிஷேக் வீட்டில் இருந்தார். அப்போது 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அபிஷேக்கிடம் நைசாக பேசி மதுகுடிக்கலாம் என்றனர். இதனை நம்பிய அபிஷேக் அவர்களுடன் சென்றுள்ளார். மதுகடையில் மதுவாங்கிய அவர்கள் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து அபிஷேக்கை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அபிஷேக் அந்த பகுதியில் ரவுடியாக வலம்வந்துள்ளார். இவருக்கும் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த ரவுடிக்கும் முன்விரோதம் உள்ளது. எனவே அந்த ரவுடி கும்பல் அபிஷேக்கை வெட்டி கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் நாலாபுறமும் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!