சுமைத்தூக்கும் தொழிலாளியை வெட்டிக் கொன்ற கும்பல்!

சிவகாசி அருகே சுமைத்தூக்கும் தொழிலாளி பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 8 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்தன் என்கிற பார்த்தீபன் (வயது 27). சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கள்ளிபட்டியில் பணி முடிந்து தனது நண்பர் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த துரைப்பாண்டி (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அரவிந்தன் பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட துரைப்பாண்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அருண்பாண்டியன், பார்த்தீபன், மதன், பழனி செல்வம் மற்றும் சிலர் மீது எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

பழிக்குப்பழி

கொலை செய்யப்பட்ட அரவிந்தன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் சிவகாசி டவுன், கிழக்கு காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளது. சிவகாசியில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நவநீதிகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அரவிந்தன் மற்றும் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் களை கைது செய்து சிறையில் அடைந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அரவிந்தன் சுமைதூக்கும் தொழிலை தொடர்ந்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரவிந்தனை நோட்டமிட்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தவர்கள் நேற்று முன்தினம் எம்.புதுப்பட்டி அருகே உள்ள கள்ளிப்பட்டி வனப்பகுதியில் பதுக்கி இருந்துள்ளனர். பின்னர் அரவிந்தன் வேலை முடிந்து வெளியே வந்த போது அவரின் மோட்டார் சைக்கிள் மீது, 2 மோட்டார் சைக்கிள்களால் மோதி உள்ளனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அரவிந்தனை, 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது. நவநீதிகிருஷ்ணன் கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக இந்த இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

8 பேரிடம் விசாரணை

கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேரை பிடித்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து 8 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!