கணவர் தூக்கிச் சென்ற 4 மாத குழந்தையை தாயிடம் ஒப்படைத்த போலீசார்!

ஒட்டன்சத்திரம் அருகே கணவர் தூக்கிச் சென்ற 4 மாத குழந்தையை போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே.கீரனூரைச் சேர்ந்தவர் சைமன் கிறிஸ்டோபர் (வயது 26). இவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த நாகமணி (வயது 24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் சைமன் கிறிஸ்டோபர் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்து விட்டார். குழந்தையை காணாமல் தவித்த நாகமணி தனது கணவரிடம் சென்று முறையிட்டார். ஆனால் அவர் குழந்தையை தர முடியாது என மறுத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசனிடம் நாகமணி புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி தலைமையிலான போலீசார் சைமன் கிறிஸ்டோபர் வீட்டுக்கு சென்றனர்.

கைக்குழந்தையை தாயிடம் இருந்து பிரிப்பது தவறு எனக் கூறிய போலீசார் அந்தக்குழந்தையை நாகமணியிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக் கொண்டு போலீசாருக்கு நன்றி தெரிவித்த நாகமணி திருப்பூர் சென்றார். மேலும் சைமன் கிறிஸ்டோபரிடமும் குழந்தையின் நன்மைக்காக இருவரும் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி சென்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!