11-ம் வகுப்பு பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை அதிரடி கைது!

துறையூரை சேர்ந்த பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்தவர் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த ஆசிரியை சர்மிளா (வயது 26). இவரும், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5-ந் தேதி ஒரே நாளில் மாயமாகினர். பள்ளிக்கு சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை கண்டுபிடித்து தருமாறு கடந்த 6-ந் தேதி மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் புகார் அளித்தனர்.


அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவனை ஆசிரியை சர்மிளா அழைத்து சென்றது தெரிய வந்தது.


தஞ்சை கோவிலில் திருமணம்
மேலும், மாணவனுடன் ஆசிரியை எங்கு இருக்கிறார் என்று அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் கண்காணித்த வண்ணம் இருந்தனர். அப்போது இருவரும் திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. கடைசியாக இருவரும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் எடமலைப்பட்டிபுதூருக்கு விரைந்து சென்று அங்கு தோழியின் வீட்டில் தங்கியிருந்த சர்மிளா மற்றும் மாணவனை மீட்டு துறையூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், திருவாரூரில் சுற்றித் திரிந்த இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள சர்மிளாவின் தோழியின் வீட்டில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது.


போக்சோ சட்டத்தில் கைது
அதனைத்தொடர்ந்து திருமண வயதை அடையாத பள்ளி மாணவனை அழைத்து சென்று திருமணம் செய்த சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


மாணவனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய ஒரு ஆசிரியை, அவரை அழைத்துச் சென்று திருமணம் செய்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!