தண்ணீரில் மூழ்கடித்து 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய்!

பழனியில் ஜோதிடர் சொன்னதை நம்பி 5 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள ராசாபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (25). இவர்களுக்கு கவின் (3) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 2-வதாக பிறந்த ஆண்குழந்தைக்கு கோகுல் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். கடந்த 21ம் தேதி காலையில் மகேஸ்வரன் வேலைக்கு சென்றுவிட்டார். அருகில் இருந்த கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய லதா வீட்டில் இருந்த தனது 5 மாத குழந்தையை காணவில்லை என அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

மேலும் பழனி தாலுகா போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களுடன் குழந்தையை தேடினர். வீட்டிற்கு அருகில் உள்ள பாலாறு – பொருந்தலாறு அணைப்பகுதியில் உள்ள ஒரு புதரில் குழந்தை நீரில் மூழ்கடித்து இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பெற்ற தாயே தனது குழந்தையை நீரில் அமுக்கி கொலைசெய்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் லதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் மகேஸ்வரனுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முதலாவதாக கவின் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் 2வதாக கடந்த 5 மாதத்திற்கு முன்பு பிறந்த குழந்தைக்கு கோகுல் என பெயரிட்டு வளர்த்து வந்தோம். அவன் பிறந்ததில் இருந்தே எனக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. கோகுலுக்கும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை. இந்நிலையில் எனக்கு தெரிந்த ஜோதிடரிடம் அவன் பிறந்த நாள் மற்றும் நட்சத்திரத்தை வைத்து விவரம் கேட்டேன்.

அவர் கோகுல் பிறந்த நேரம் சரியில்லை. அதனால் தான் உங்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுகிறது எனதெரிவித்தார். இதனால் எனது மகனை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டேன்.

வேறு யோரோ செய்தது போல் இருக்கவேண்டும் என்பதற்காக போலீசாரிடம் புகார் தெரிவித்தேன். இருந்தபோதும் போலீசார் விசாரணையில் நான் சிக்கிக் கொண்டேன் என்றார். இதனையடுத்து லதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!