கொரோனாவின் அடுத்த நிலை என்ன..? திணரும் மருத்துவ நிபுணர்கள்!

கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் திணறியபடி உள்ளனர்.

சீனாவில் உருவாகி உலகம் முழுக்க பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் பெற்று வருகிறது.

காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று இதுவரை பல்வேறு வடிவங்களுக்கு கொரோனா வைரஸ் மாறிவிட்டது. இதில் டெல்டா பிளஸ் வகை கொரோனா உலகம் முழுவதும் மாபெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி அதிரவைத்தது.

இந்த நிலையில் ஆப்ரிக்க நாடுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்திற்கு வந்தது. இந்த வடிவமும் பிஏ, பிஏ-1, பி.ஏ-2, பி.ஏ-3 என்று 4 வகையாக உருமாற்றம் அடைந்தது. அதோடு மின்னல் வேகத்திலும் பரவியது.

என்றாலும் ஒமைக்ரான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதே சமயத்தில் டெல்டா பிளசை கட்டுப்படுத்தவும் ஒமைக்ரான் உதவியது. தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் வைரஸ் தான் அதிக அளவில் பரவி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒமைக்ரான் அலை வீசியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பு ஏற்படுத்தாமல் ஒமைக்ரானால் உருவான 3-வது அலை கட்டுக்குள் அடங்கியது. தற்போது இந்தியாவில் கொரோனா 3-வது அலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதற்கிடையே கொரோனா 4-வது அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் 4-வது அலை வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டது. என்றாலும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தென்கொரியா, சீனா, ஹாங்காங் உள்பட சில நாடுகளில் ஒமைக்ரான் வைரசின் புதிய வடிவம் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஒமைக்ரான் பி.ஏ-2 வகை வடிவம் பரவுவதால் இந்த நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக மற்ற நாடுகளிலும் ஒமைக்ரான் பி.ஏ-2 பரவி அடுத்த அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் அடுத்தடுத்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஒமைக்ரான் புதிய வடிவம் காரணமாக அடுத்த அலை வரலாம். அல்லது வராமலும் போகலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால் புதிய அலை எழுந்தால் அது எப்போது வரும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.

இதனால் கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் திணறியபடி உள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!