உக்ரைனின் பிரபல பாலே நடன கலைஞருக்கு நடந்த சோகம்!

ரஷிய தாக்குதலில் காயமடைந்த உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞர் 3 வாரங்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார். உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.

இதில், கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிம் ஒன்றின் மீது ரஷிய ஏவுகணை ஒன்று நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (வயது 67) காயமடைந்து உள்ளார். இதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இதனை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகை உறுதி செய்துள்ளது.

உக்ரைன் நாட்டில் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் உயரிய விருது நடிகை ஓக்சானாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, ரஷிய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞர் ஆர்டியோம் தத்சிஷின் (வயது 43) காயமடைந்து உள்ளார். அவர் கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அந்நாட்டில், தேசிய அளவில் சிறந்த நடன கலைஞரான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!