கடும் போர் பதற்றம்… ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் பயணம்!

இந்த பயணம் பல நாட்களாக திட்டமிடப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 20வது நாளாக நீடிக்கிறது. ரஷிய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அங்குள்ள குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கடும் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பை சேர்ந்த போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டனர்.

பாதுகாப்பு அபாயம் நீடித்த நிலையிலும் மூன்று தலைவர்களும் பல மணி நேர ரயில் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பயணம் பல நாட்களாக திட்டமிடப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

செக் குடியரசு, ஸ்லோவேனியா நாட்டு தலைவர்கள் மற்றும் துணைப் பிரதமருடன் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தாம் இருப்பதாக போலந்து பிரதமர் மடேஸ் மொராவில்கி தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக, உலகம் அதன் பாதுகாப்பு உணர்வை இழந்துவிட்டது என்றும், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள், உடைமைகள் அனைத்தையும் இழந்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோகத்தை நாம் நிறுத்த வேண்டும், அதனால்தான் நாங்கள் கீவ் சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் மூன்று பேரும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்களா என்ற விபரம் வெளியாகவில்லை. ஐரோப்பிய தலைவர்களின் இந்த பயணம் மூலம் உக்ரைனுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் வலுவான ஆதரவு வெளிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!