அழுதுகொண்டே தனியாக உக்ரைன் எல்லையை கடக்கும் சிறுவன்!

உக்ரேனிய சிறுவன் ஒருவன் ஆதரவின்றி தனியாக அழுதுகொண்டே போலாந்துக்கு செல்லும் வீடியோ காண்போரின் கண்களில் கண்ணீரை வர செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனிடையே, ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைனில் இருந்து பொதுமக்கள் போலாந்து, ஸ்லொவாகியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ் ஆகிய அண்டை நாடுகளுக்கு அகதிகளாக நுழைந்து வருகின்றனர்.

உக்ரைனின் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சொத்து உடைமைகள், சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து நிர்கதியாக அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடி சென்று கொண்டிருக்கின்றனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உக்ரைனில் நிலவுகிறது.

இந்த நிலையில், உக்ரைனிலிருந்து வெளியேறும் லட்சக்கணக்கான அகதிகளில் ஒருவனாக உக்ரேனிய சிறுவன் ஒருவன் தனியாக, உக்ரைன் எல்லையை விட்டு அண்டை நாடான போலாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளான்.

அந்த சிறுவன் அழுதுகொண்டே தனது பொருட்களை போலந்திற்குள் இழுத்துச் செல்வதை பார்த்து கண்ணீர் விட்டதாக வீடியோவை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவனுடைய குடும்பத்தினர் எங்கே என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அந்த சிறுவன் தனியாக தான் உக்ரைனை விட்டு வெளியேறினான என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த பரிதாப வீடியோவை பதிவிட்டவர்கள் சிறுவன் தனியாக தான் பயணம் செய்தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர்.அதில் அதிகமானோர் பெண்கள். பெரும்பாலான ஆண்கள் தங்கள் நாட்டை பாதுகாப்பதற்காக ராணுவத்துடன் கைகோர்த்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.

இதே போன்ற சோக சம்பவங்கள் உக்ரைனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் அரங்கேறி வருகின்றன. கீவ் நகரின் தென்கிழக்கே 300 கி.மீ தொலைவில் உள்ள கிரெமென்சக் பகுதியிலிருந்து, 37 வயதான எலேனா மகாரோவா என்ற குடும்பப்பெண் ஒருவர், போர் தொடங்கியவுடன் தன் குடும்பத்தினரை விட்டு பிரிந்து அகதியாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளார்.

அவருடைய வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தங்களால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று தெரிவித்து வீட்டை விட்டு வர மறுத்துவிட்டனர். வீட்டிலுள்ள ஆண்கள் தாய்நாட்டுக்காக போருக்கு சென்று சண்டையிட விரும்பி வரவில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக புலம் பெயர்ந்துள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், போர் நடைபெறும் ஒரு நகரத்திலிருந்து தனது 60 வயது தாய் மற்றும் பதின்பருவ மகளுடன் போலாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளார் இன்னொரு பெண்மணி.

உக்ரைனில் உணவு, நீர், வெப்பம் மற்றும் மருந்து ஆகியவை பெரும் பற்றாக்குறையாகி உள்ளன.இரண்டாம் உலகப்போருக்கு பின், ‘இதுவே ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடி’ என்று ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!