நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி – பெற்றோர் எதிர்ப்பு!

கோவை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை காரில் கடத்தி கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை நகரில் மிக முக்கியமான சாலை அவினாசி சாலை. இந்த ரோட்டில் தான் விமான நிலையம் உள்ளது. மேலும் சென்னை, சேலம், திருப்பூர் செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் தான் பயணிக்கும். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கும்.

நேற்று இரவு அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் சிக்னலில் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.

இதுதவிர சிவப்பு சிக்னல் விழுந்ததால், அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.

அப்போது சிக்னலில் நின்றிருந்த ஒரு காரில் இருந்து வாலிபரும், இளம்பெண்ணும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பியபடி காரை திறந்து வெளியே குதித்தனர்.

காரில் இருந்த மற்ற நபர்கள், அவர்களை வெளியே செல்ல விடாமல் தடுத்ததுடன் உள்ளே இழுக்க போராடினர்.

இதனை அங்கு சிக்னலில் நின்றிருந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து, காரின் அருகே சென்று, வாலிபரையும், இளம்பெண்ணையும் காரில் இருந்து இறக்கி விசாரித்தனர்.

அப்போது நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணம் பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்கள் எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். கைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்துள்ளனர்.

எங்களை கொல்ல பார்க்கிறார்கள். நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என காதல் ஜோடியினர் தொடர்ந்து கூறிய படியே இருந்தனர்.

சிக்னல் விழுந்தும் வாகனங்கள் செல்லாததாலும், சாலையில் கூட்டமாக பயணிகள் நின்றதை பார்த்த அங்கு பணியில் இருந்த காவலர் சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவரை பார்த்த காதல் ஜோடியினர் அவரது காலில் விழுந்து தங்களை காப்பாற்றுமாறு கதறினர்.

உடனடியாக அவர் ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து காதல்ஜோடியிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள், மணியகாரம் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்வர்(22), சரவணம்பட்டியை சேர்ந்த ஸ்நேகா(19) என்பதும் தெரியவந்தது.

போலீசாரிடம் ஸ்நேகா கண்ணீர் மல்க கூறியதாவது:- நாங்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். முதலில் எங்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியாமல் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு எங்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்தது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் இருவீட்டிலும் எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் நாங்கள் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தோம். அதன்படி வீட்டை விட்டு வெளியேறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம்.

எங்களது பெற்றோர் தேடுவதை அறிந்து, நேற்று காலை சரவணம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தோம்.

போலீசாரும் எங்கள் 2 குடும்பத்தினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவீட்டாருமே காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் எங்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும், எனது தந்தை, எங்களிடம் நீங்கள் உறவினர் யாரும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டீர்கள். நம்முடைய சொந்த ஊரான தேனிக்கு சென்று, அங்குள்ள குலதெய்வ கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்து விட்டு வரலாம் என அழைத்தார்.

நாங்களும் உண்மையிலேயே அவர் எங்களை சேர்த்து வைப்பதாக நினைத்து அவருடன் வீட்டிற்கு சென்றோம்.

இரவில் காரில் நான், எனது கணவர் மற்றும் எனது தந்தை ஆகியோர் காரில் புறப்பட்டோம். அப்போது எங்களுடன் மேலும் 4 பேர் இருந்தனர். அவர்கள் யார் என்று கேட்டதற்கு உறவினர்கள் என தந்தை கூறினார்.

இதையடுத்து நாங்கள் காரில் தேனியை நோக்கி பயணித்தோம். அப்போது என்னுடைய உறவினர்கள் என்று கூறியவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை என்று கணவரிடம் தெரிவித்தேன்.

எங்களை பிரிக்க தான் தேனிக்கு அழைத்து செல்கிறார்கள் என சந்தேகித்தோம். இதனால் அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைத்தோம்.

கார் லட்சுமி மில் சிக்னலில் நிற்கவும் இதுதான் சமயம் என நினைத்து, காரில் இருந்து இறங்கி ஓடி தப்பிக்க முயன்றோம் என போலீசாரிடம் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடம் சரவணம்பட்டி என்பதால் ரேஸ்கோர்ஸ் போலீசார் காதல் ஜோடி பற்றி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் வந்து, காதல்ஜோடி மற்றும் அவர்களுடன் சென்றவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இளம்பெண் நான் பெற்றோருடன் செல்ல மாட்டேன். கணவருடன் தான் செல்வேன். எங்களை இவர்கள் பிரிக்க நினைக்கிறார்கள் என்றார். இதுதொடர்பாக போலீசார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.

தொடர்ந்து அவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய உதவி கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் ஜோடியினர் அவர்களது வக்கீல்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று காதல் ஜோடி மற்றும் பெற்றோரிடம் போலீசார் விசாரிக்கிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!