நகை கடை பெண் ஊழியர் தாயுடன் அதிரடி கைது… வீட்டில் சிக்கிய நகைகள்!

வள்ளியூர் ஜூவல்லரியில் நகை திருடிய பெண் ஊழியரை கைது செய்த போலீசார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே ஜூவல்லரி ஒன்று உள்ளது. வள்ளியூரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 50) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நகைக்கடையை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் சுமார் 10 மாதங்களாக வள்ளியூர் அருகே உள்ள ராஜலிங்க புரத்தை சேர்ந்த சுபா (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரன் தனது கடையில் நகைகள் குறைந்து வருவதை கவனித்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்த போது கடையில் வேலை பார்த்தவர்கள் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து ராமச்சந்திரன் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா உத்தரவின்பேரில் வள்ளியூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.

அதில் கடையில் வேலை பார்த்து வந்த சுபா மதிய உணவு இடைவேளையின் போது தனது தாயார் விஜய லட்சுமியை (42) வரச்செய்து தினமும் செயின், மோதிரம் நெக்லஸ் கம்மல் மற்றும் கை செயின் போன்ற நகைகளை எடுத்து கொடுத்து விட்டு சில போலி நகைகளை திருடிய இடத்தில் மாற்றி வைத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சுபா மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 41 பவுன் நகைகளை மீட்டனர்.

கைதான 2 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். நகை திருடியவர்களை விரைந்து கைது செய்த இன்ஸ்பெக்டர்கள் சாந்தி, சாகுல் ஹமீது மற்றும் குழுவினரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா பாராட்டினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!