கொல்லப்பட்டதாக கூறப்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிருடன் உள்ளனர்?

சரணடையுமாறு கூறிய ரஷிய போர் கப்பல் கேப்டனை உக்ரைன் வீரர்கள் கெட்டவார்த்தையால் திட்டிய ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 6-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் பாம்பு தீவில் கடந்த வியாழக்கிழமை உக்ரைன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதிக்கு வந்த ரஷிய போர் கப்பல் ஒன்று உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கூறியது. ரஷிய போர் கப்பலின் கேப்டன் தீவில் உள்ள உக்ரைன் வீரர்களிடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கூறினார். இது தொடர்பான ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

அந்த ஆடியோ பதிவில் ரஷிய போர் கப்பல் கேப்டன் கூறுகையில், பாம்பு தீவு, இது ரஷிய போர் கப்பல். உங்கள் (உக்ரைன் வீரர்கள்) ஆயுதகளை கீழே போட்டுவிட்டு சரணடையும்படி நான் கேட்டுக்கொள்கிறேன் அல்லது உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். உங்களுக்கு கேட்கிறதா?’ என்றார்.

இதற்கு, அந்த தீவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 13 உக்ரைன் வீரர்களின் தளபதி பதில் அளித்தார். அவர் கூறுகையில், சரி இது தான் முடிவு’ என்றார். மேலும், அவர் ரஷிய போர் கப்பல் மற்றும் அதன் படை வீரர்கள், தளபதியை கெட்ட வார்த்தையில் திட்டி சரணடைய மறுத்தார்.

இதனை தொடர்ந்து தீவில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது ரஷிய போர் கப்பல் தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் வீரர்கள் 13 பேரும் வீர மரணமடைந்ததாக கூறப்பட்டது. வீரர்கள் மரணமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த நிகழ்வுக்கு உக்ரைன் அதிபரும் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாம்பு தீவில் ரஷிய படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட உக்ரைன் வீரர்கள் 13 பேரும் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷிய படையினர் இரு முறை நடத்திய தீவில் இருந்த படையினர் முறியடித்ததாகவும் ஆனால், மேற்கொண்டு சண்டையிட ஆயுதங்கள் இல்லாததால் வீரர்கள் சரண் அடைந்ததாகவும் உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

சரண் அடைந்த உக்ரைன் வீரர்களை ரஷிய படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா பகுதிக்குகொண்டு சென்று கைதிகளாக அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷிய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் தற்போது நலமுடன் உள்ளதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!