பஜ்ரங்தள பிரமுகர் சாவில் 2 இளம்பெண்களுக்கு தொடர்பு – திடுக்கிடும் தகவல்கள்!

சிவமொக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் 2 இளம்பெண்களுக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஜ்ரங்தள பிரமுகர் கொலை

சிவமொக்கா டவுன் சீகேஹட்டியை பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் ஹர்ஷா(வயது 24) கடந்த 20-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காசிப், சையது நதீம், அசிபுல்லா கான், ரிஹான் கான், அப்துல் அர்பான், நெகால் உள்பட 8 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவமொக்காவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் 25-ந் தேதி( நாளை) வரை 144 தடை உத்தரவும், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சிவமொக்காவில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

டிரோன் மூலம் கண்காணிப்பு

மேலும் இருதரப்பினரும் எந்த நேரத்திலும் மோதலில் ஈடுபட தயாராக இருப்பதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது. இதனால் நகரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலோர சிறப்பு காவல் படையினரும் சிவமொக்கா வந்து, 7 டிரோன் கேமராக்கள் உதவியுடன் நகர் முழுவதையும் கண்காணித்து வருகின்றனர்.

திடுக்கிடும் தகவல்கள்

இந்த நிலையில் ஹர்ஷா கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சம்பவம் நடந்த அன்று அவரை 2 இளம்பெண்கள் நேரில் சந்தித்து பேசியதாகவும், ஆனால் அவர்களை ஹர்ஷாவுக்கு முன்பின் தெரியாது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த 2 இளம்பெண்களும் ஏற்கனவே ஹர்ஷாவை செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் அவர்களிடம் ஹர்ஷா உங்களை யார் என்று எனக்கு தெரியாது என கூறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்த அன்று ஹர்ஷாவை சந்திந்து பேசிய அந்த பெண்கள் மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றவரை தடுத்து நிறுத்தி தங்களுடன் நடந்து வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில்தான் ஹர்ஷாவை மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இதனால் இளம்பெண்களுக்கும், அவரது கொலைக்கும் சம்பந்தம் இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். இதனால் அவர்களை பிடித்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செல்போன் சிக்கியது

இதற்கிடையே, ஹர்ஷா கொலையில் கைதானவர்களில் ரிஹான், ஆசிப், நிகான், அப்னான் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று சிவமொக்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிவமொக்கா மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் காணாமல் போயிருந்த ஹர்ஷாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் உள்ள தகவல்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் ஹர்ஷா யார், யாருடன் பேசி இருக்கிறார் என்பது குறித்தும் போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரித்து வருகிறார்கள்.

ரெயில் மூலம்…

இந்த நிலையில் கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் 8 பேரும் தங்களது செல்போன்களை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு பத்ராவதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து ரெயில் மூலம் மைசூரு வழியாக பெங்களூருவுக்கு தப்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அங்கிருந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிந்து தப்பிச் சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிவந்திருக்கிறது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!