மனைவி-மாமியாரை வெட்டி கொன்ற பேக்கரி உரிமையாளர் – பின்ணனியில் பகீர் தகவல்!

பெங்களூருவில் மனைவி, மாமியாரை பேக்கரி உரிமையாளர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

நடத்தையில் சந்தேகம்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 48). இவருக்கும் பெங்களூரு கோவிந்தராஜ்நகர் அருகே எஸ்.ஆர்.காலனியில் வசித்து வந்த சுனிதா(38) என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கோவிந்தராஜ்நகர் அருகே மூடலபாளையா சஞ்சீவினி நகர் பகுதியில் ரவிக்குமார், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்தார்.

ரவிக்குமார் பேக்கரி நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரவிக்குமாருக்கு, சுனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறும் ஏற்பட்டு வந்து உள்ளது. இதுபோல நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் பிரச்சினை உண்டானது.

வெட்டி கொலை

இந்த நிலையில் நேற்று காலை எஸ்.ஆர்.நகர் பகுதியில் வசித்து வந்த சுனிதாவின் தாய் சரோஜம்மா(65) தனது மகளை பார்க்க வந்து இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் ரவிக்குமாருக்கும், சுனிதாவுக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு உண்டானது. அப்போது சுனிதாவின் நடத்தை குறித்து ரவிக்குமார் பேசி தகராறு செய்து உள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுனிதாவை சரமாரியாக வெட்டினார். இதனை சரோஜம்மா தடுக்க முயன்றார். இதனால் ரவிக்குமார், சரோஜம்மாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த சுனிதாவும், சரோஜம்மாவும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தனர்.

போலீசில் சரண்

இதன்பின்னர் ரவிக்குமார் கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்ற போலீசார் சுனிதா, சரோஜம்மாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைதான ரவிக்குமார் மீது கோவிந்தராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் கோவிந்தராஜ்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!