லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!

லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.

73 வயதான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் 5-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15-ந் தேதி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை 20 சதவீத சிறுநீரக திறனுடன் மட்டுமே இயங்கி வருகிறது என்று ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், லாலு பிரசாத்துக்கு சிகிச்சை அளித்து வரும் ஏழு பேர் கொண்ட மருத்துவக் குழுவின் தலைவர் வித்யாபதி பேசுகையில், “லாலு பிரசாத் யாதவின் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக உள்ளது. சர்க்கரை அளவு காலையில் 70 mg/dl ஆக இருந்தது, ஆனால் மதியம் 240 mg/dl ஆக இருந்தது. அவரது சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 130 முதல் 160 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது.

மேலும், லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அவர் சிறுநீரக நோயின் நான்காம் நிலை நோயாளி ஆவார், தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவீத திறனில் மட்டுமே செயல்படுகிறது. அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

முன்னதாக, 5-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கால்நடை தீவன வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத், 2017ம் ஆண்டு டிசம்பரில் இருந்து சிறையில் இருக்கிறார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் தற்போது ரிம்ஸ்-ல் சிகிச்சை பெற்று வருகிறார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!