உடல் ஒன்று ஓட்டு இரண்டு – பஞ்சாப் தேர்தல் ருசிகரம்!

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் இடுப்பு ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள் முதன் முதலாக ஓட்டு போட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் பிங்கல்வாராவை சேர்ந்தவர்கள் சோஹன்சிங், மோகன்சிங். இவர்கள் சோனா, மோனா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் இடுப்பு ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள். 2003 ஜூன் மாதம் டெல்லியில் பிறந்த இவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள். பின்னர் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஒரு அனாதை இல்லம் இவர்களை தத்து எடுத்துக்கொண்டது.

இடுப்பு ஒட்டிப்பிறந்த இவர்கள் இருவருக்கும் 2 தனித்தனி இதயங்கள், 2 ஜோடி கைகள், சிறுநீரகங்கள், முதுகெலும்புகள் உள்ளன. ஆனால் கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் ஆகியவை ஒன்றுதான் உள்ளன. ஒரு ஜோடி கால்கள்தான் உள்ளன.

இவர்கள் பிறந்ததும் இவர்களை பிரித்தெடுக்க ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றபோது, இருவரில் ஒருவராவது இறக்க நேரிடலாம் என கூறியதால் அந்த முடிவு கைவிடப்பட்டு விட்டதாம்.

தற்போது இவர்கள் ஐ.டி.ஐ. ஒன்றில் படித்து எலெக்டிரிஷியனுக்கான டிப்ளமோ பெற்று, பஞ்சாப் மாநில மின் கழகத்தில் வேலை பார்க்கிறார்கள்.

இவர்களுக்கு கடந்த ஆண்டுதான் 18 வயதாகி, ஓட்டுரிமை பெற்றிருக்கிறார்கள். முதல் முறை வாக்காளர்களான இவர்கள் இருவரும் தனித்தனி வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 2 தனித்தனி புகைப்பட அடையாள அட்டைகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.கருணா ராஜு வழங்கினார்.

இவர்கள் மன்னாவாலா என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு 10 கி.மீ. தொலைவுக்கு கடந்து வந்தனர். வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்த கிராம தலைவர்கள், பிரமுகர்கள் அவர்களை மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் முதன் முதலாக நேற்று பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஓட்டுபோட்டு தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.

அவர்கள் ஓட்டு ரகசியத்தை காக்கிற வகையில் சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்திருந்தனர். அதன்படி அவர்கள் வாக்குப்பதிவு செய்தபோது, அவர்களுக்கு அடர்ந்த கருப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இவர்கள் முதன் முதலாக நேற்று ஓட்டு போட்டதைத் தொடர்ந்து துணை கமிஷனர் குர்பிரீத் சிங் கேரா வாக்குச்சாவடிக்கு வந்து, அவர்களுக்கு முதல் முறை வாக்காளர்கள் என்ற சான்றிதழை வழங்கினார்.

ஓட்டுபோட்ட பின்னர் அவர்கள் நிருபர்களிடம் பேசுகையில், “நாங்கள் பஞ்சாப் மாநில மின் கழகத்தில் பணிபுரிகிறோம். ஆனால் ஒரே சம்பளம்தான் பெறுகிறோம். நாங்கள் வாக்குரிமை பெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” என்று கூறினார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!