சம்பளம் கேட்டதால் உரிமையாளர் வெறிச்செயல் – காவலாளிக்கு நடந்த சோகம்.!

கோவையில் சம்பளம் கேட்ட காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மதுரை தெற்கு மாசி வீதியை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 76). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை பிரிந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் ராமநாதபுரத்தில் இயங்கி வந்த எஸ்.எஸ். செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.

அந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக ரத்தினவேலுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் உரிமையாளர் திலிப்குமார், அதிகாரி ஜான் ஆகியோரை தொடர்பு கொண்டு சம்பளம் கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அவர்கள் நவஇந்தியா அருகே வருமாறு கூறினர். இதனையடுத்து ரத்தினவேலு அவர்கள் அழைத்த இடத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த நிறுவனத்தில் உரிமையாளர் திலிப்குமார், அதிகாரி ஜான் ஆகியோர் உங்களின் வங்கி கணக்கிற்கு சம்பளத்தை அனுப்பி விட்டோம் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு கூறினர். இதனால் மனவேதனை அடைந்த ரத்தினவேலு நிறுவனத்தில் உரிமையாளர் மற்றும் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து ரத்தினவேலுவை தாக்கினர். பின்னர் அவரை காரில் ஏற்றி கொடிசியாவுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து காவலாளி ரத்தினவேல் மீது திலிப்குமார் பெட்ரோலை ஊற்றினார். அதிகாரி ஜான் தீ பற்ற வைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். திலிப்குமார், ஜான் ஆகியோர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தீ காயத்துடன் உயிருக்கு போராடிய ரத்தினவேலுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரத்தினவேலு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பளம் கேட்ட காவலாளியை எரித்துக் கொன்ற திலிப்குமார், ஜான் ஆகியோரை தேடி வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!