கல்யாண மன்னன் மீது மேலும் 3 பெண்கள் பகீர் புகார்

இதையடுத்து அந்த நபரின் மனைவிகள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் கேந்திரா பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் 66 வயதான பிதுபிரகாஷ் சுலைன். இவர் தன்னை ஹோமியோபதி டாக்டர் என கூறி கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர, படித்த, வசதி படைத்த பெண்களை மோசடி செய்து ஏமாற்றி மணந்துள்ளார்.

ரமேஷ் சந்திர ஸ்வைன், டாக்டர் ரமணி ரஞ்சன் ஸ்வைன் என பல்வேறு பெயர்களில் அவர் பெண்களிடம் பழகியுள்ளார்.

இவரது வலையில் படித்த பெண்கள், வக்கீல், ஆசிரியை உள்பட பல பெண்கள் விழுந்தனர். இது தொடர்பான புகாரில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பதுங்கி இருந்த பிதுபிரகாஷ் சுலைனை அண்மையில் போலீசார் கைது செய்தனர்.

14 பெண்களை தவிர வேறு பெண்களையும் இவர் ஏமாற்றினாரா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள பிதுபிரகாஷ் சுலைன் மீது ஏமாற்றி திருமணம் செய்ததாக மேலும் மூன்று பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

தற்போது அவரது மனைவிகளின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் டாஷ், போலி மருத்துவரின் மேலும் 3 மனைவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.

ஒடிசாவில் 4 பேர், டெல்லியில் 3 பேர், அசாமில் 3 பேர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் தலா இருவர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவர் என மொத்தம் 17 பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்ததுள்ளார்.

அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை அவர் மோசடி செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். பிது பிரகாஷ் சுலைனிடம் இருந்து 11 ஏ.டி.எம். கார்டுகள், 4 ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!