கவர்ச்சி நடிகையை கொன்ற சகோதரரின் வழக்கில் திடீர் திருப்பம்!

தனது சகோதரியின் நடத்தையை சகிக்க முடியாமல் கவுரவ கொலை செய்தததாகவும் அதில் வருத்தம் இல்லை என்றும் ஆயுள் தண்டனை பெற்ற சகோதரர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆணாதிக்க கொள்கைகளை எதிர்த்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக் களையும் வெளியிட்டதன் மூலம் சமூக வலைத்தள நட்சத்திரமாக கருதப்பட்டார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன குவான்டீல் பலூச், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட முல்தான் நகரில் உள்ள வீட்டில் கடந்த 2016ம் ஆண்டு பிணமாக கிடந்தார்.

குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் அவரை கழுத்தை நெறித்து கொன்று விட்டதாக பலூச்சின் சகோதரர் முகமது வாசிம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் வருத்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் நாட்டின் மிக மோசமான கவுரவ கொலையாக இது கருதப்பட்டது. முல்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த கொலை வழக்கில் வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லாகூர் உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கில் அவரது பெற்றோர்கள் மகனுக்கு மன்னிப்பு வழங்க மாட்டோம் என்று முதலில் கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் மனம் மாறி முகமது வாசிமிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

விசாரணை நீதிமன்றம் தவறாக தனது அதிகாரத்தைப் பயன் படுத்தியதாகவும், வாசிம் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியதாகவும் அவரது வழக்கறிஞர் சர்தார் மெஹ்பூப் தமது வாதத்தின் போது குறிப்பிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கில் முகமது வாசிமிற்கான ஆயுள் தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் நேற்று ரத்துச் செய்துள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவு வெளியாகவில்லை.

ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத் தண்டனைக்குப் பிறகு நீதிமன்றத்தால் வாசிம் முழுவதுமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது வழக்கறிஞர் சர்தார் மெஹ்பூப் தெரிவித்துள்ளார். இந்த வார இறுதியில் வாசிம் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!