செல்பி மோகம்… பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர்- 8 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு!

கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்பு குழுவினர் நேற்று ராட்சத கயிறு மூலம் ராம்குமாரின் உடலை மீட்டனர்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் அழகர்சாமி. அவருடைய மகன் ராம்குமார் (வயது 32). இவர், அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். தனது நண்பர்கள் 7 பேருடன் இவர் கடந்த 1-ந்தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கடந்த 2-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள ரெட்ராக் பகுதிக்கு ராம்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சென்றனர்.

ரெட்ராக் பகுதியில், செங்குத்தான பாறையின் நுனி பகுதிக்கு ராம்குமார் சென்றார். பின்னர் அங்கிருந்தபடி ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள பள்ளத்தாக்கில் அவர் தவறி விழுந்து விட்டார். வனத்துறையினர், தீயணைப்பு படையினர், மலையேற்ற குழுவினர் மற்றும் உள்ளூர் மக்கள் தேடினர்.

இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி அவர் 1,500 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டுபிடித்தனர். அடர் பனிமூட்டம், வனவிலங்குகளின் நடமாட்டத்தினாலும் உடலை மேலே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ராம்குமாரின் உடலை கைப்பற்றி, அதனை சாக்குப்பை ஒன்றில் கட்டி வைத்து விட்டு மீட்பு குழுவினர் திரும்பினர்.

இந்த நிலையில், கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்பு குழுவினர் நேற்று ராட்சத கயிறு மூலம் ராம்குமாரின் உடலை மீட்டனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!