நள்ளிரவில் வியாபாரியின் மனைவி, குழந்தைகள் உள்பட 5 பேருக்கு நடந்த கொடூரம்!

மண்டியாவில், வியாபாரியின் மனைவி, குழந்தைகள் உள்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

வியாபாரிகள்

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கே.ஆர்.எஸ். கிராமம் பஜார் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கங்காராம். இவரது அண்ணன் கணேஷ். இவர்கள் இருவரும் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களுக்கும் சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள். கங்காராமின் மனைவி லட்சுமி(வயது 32). இவர்களுக்கு ராஜ்(12), கோமல்(7), குணால்(5) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் கங்காராமின் அண்ணன் மகன் கோவிந்த்(12) என்பவனும் வசித்து வந்தான்.

வியாபார விஷயமாக கங்காராமும், கணேசும் வெளியூர்களுக்கு சென்றுவிட்டால் மாதத்திற்கு இருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார்களாம். அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கங்காராமும், அவரது அண்ணன் கணேசும் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் லட்சுமி தனது குழந்தைகள் மற்றும் கணேசின் மகனுடன் தனியாக இருந்துள்ளார்.

படுகொலை

நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த யாரோ மர்ம நபர்கள், அதிரடியாக கங்காராமின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களால் லட்சுமி மற்றும் குழந்தைகளை சரமாரியாக தாக்கினர். இதில் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் லட்சுமி, அவரது குழந்தைகள் ராஜ், கோமல், குணால் மற்றும் கணேசின் மகன் கோவிந்த் ஆகிய 5 பேரையும் மர்ம நபர்கள் படுகொலை செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், பீரோவில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். நேற்று காலையில் கங்காராமின் வீடு திறந்து கிடப்பதையும், வீட்டில் லட்சுமி மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதையும் அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பரபரப்பு

பின்னர் அவர்கள் இதுபற்றி கே.ஆர்.எஸ். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரவீன் மதுகர், மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கைரேகை நிபுணர்களை அங்கு வரவழைத்து தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் லட்சுமி மற்றும் குழந்தைகள் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனிப்படை அமைப்பு

இந்த சம்பவம் குறித்து தெற்கு மண்டல ஐ.ஜி. பிரவீன் மதுகர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த படுகொலை சம்பவம் என்ன காரணத்திற்காக அரங்கேறியது என்று தெரியவில்லை. அதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று கூறினார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!