மருமகளை படிக்கவைத்து மறுமணம் செய்து கொடுத்த மாமியார்..!

ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது. குழந்தை திருமணங்களும் ஆங்காங்கே ரகசியமாக நடத்தப்படுகின்றன. பெண் சுதந்திரத்திற்கு எதிர்மாறான நிகழ்வுகள் நடை பெறும் சூழலில், பெண் ஒருவர் தனது மகனின் மரணத்திற்குப் பிறகு மருமகளை படிக்க வைத்து மறுமணமும் செய்து கொடுத்து முன் மாதிரியாக திகழ்கிறார்.

அந்த புரட்சி பெண்ணின் பெயர், கமலா தேவி. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பதேபூர் ஷேகாவதி பகுதியில் வசிக்கிறார். இவரது இளைய மகன், சுபம். இவர் கிர்கிஸ்தான் நாட்டில் தங்கி இருந்து எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இவருக்கும் சுனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் சுபம் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து போனார். அந்த சமயத்தில் சுனிதாவும் பட்டப் படிப்பு படித்து வந்தார். கணவரின் எதிர்பாராத மரணம் சுனிதாவை நிலை குலைய செய்தது. படிப்பையும், எதிர்கால வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியது.

மகன் இறந்து விட்டான் என்ற காரணத்திற்காக மருமகளின் வாழ்க்கை நிர்மூலமாகி விடக்கூடாது என்பதில் கமலா தேவி உறுதியாக இருந்தார். மருமகளை ஆசுவாசப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவர், பட்டப் படிப்பை தொடர வைத்தார். அதன்படியே மரு மகள் சுனிதாவும் நன்றாக படித்து இளங்கலை படிப்பை பூர்த்தி செய்தார். படிப்பை முடித்தாலும் நல்ல வேலையில் அமர்ந்தால்தான் மருமகளின் வாழ்க்கை நல்லபடியாக அமையும் என்று கருதியவர், போட்டி தேர்வுகளை எழுத ஊக்கப்படுத்தினார்.

மருமகள் விரும்பிய படிப்பையும் படிக்க வைத்தார். மாமியார் வழிகாட்டுதலின்படி படித்த சுனிதாவின் முயற்சி வீணாகவில்லை. போட்டி தேர்வில் வெற்றி பெற்றவருக்கு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியை பணி கிடைத்தது. தற்போது சுனிதா சுரு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். மருமகள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு முன்னேறியதை பார்த்து பெருமிதம் கொண்டதோடு கமலா தேவியின் கடமை முடிந்துவிடவில்லை.

மருமகள் மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்பினார். அதனை செயல்படுத்தியும் காட்டிவிட்டார். சமீபத்தில் முகேஷ் என்ற நபருக்கு சுனிதாவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி காட்டியதுடன் கிராம மக்களின் பாராட்டையும் பெற்று விட்டார்.

‘கமலா தேவி தனது மருமகளுக்கு தாயாக இருப்பதாகவும், மறுமணம் பற்றிய விஷயத்தில் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருப்பதாகவும்’ பலரும் பாராட்டுகிறார்கள்.

அதற்கேற்ப சுனிதா தேவி தன் மகள் போலவே சுனிதாவை கருதுகிறார். ‘‘என் மகன் சுபம், சுனிதாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறான். அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தான். நாங்களும் சுனிதாவை பற்றி விசாரிப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றோம். அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இல்லை என்பதை அறிந்தோம்.

ஆனாலும் அவர்கள் வரதட்சணை கொடுப்பதற்கு முன் வந்தார்கள். ஆனால் நாங்கள் அதை நிராகரித்துவிட்டோம். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த பிறகு பக்குவப்பட்ட பெண்ணாக நடந்து கொண்டாள்.’’ என்கிறார், கமலா தேவி.

அவரது மூத்த மகன் ரஜத் பங்காரா கூறுகையில், ‘‘என் சகோதரன் சுபம் இறந்த பிறகு என் அம்மா சுனிதாவை நன்றாக கவனித்துக்கொண்டார். அவரை எங்கள் வீட்டில் பிறந்து வளர்ந்த குழந்தை போலவே பாவித்தார். சுனிதாவும் அவருக்கு கீழ்படிந்து அன்பாக நடந்து கொண்டார்’’ என்கிறார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!