‘செல்பி’க்கு உற்சாகமாக போஸ் கொடுக்கும் கருங்குரங்கு!

நாகர்கோவில் அருகே வழிதவறி ஊருக்குள் புகுந்த கருங்குரங்கு ஒன்று மனிதர்களிடம் அன்பாக பழகி ‘செல்பி’க்கு அசராமல் போஸ் கொடுக்கிறது. சிறுவர்களும் அந்த குரங்குடன் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

இந்த அபூர்வ சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக ஒரு கருங்குரங்கு குடியிருப்பு பகுதியில் உலா வருகிறது. அந்த குரங்கு மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்ததாக தெரிகிறது.

வழக்கமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் குரங்குகள் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது, மரங்களில் உள்ள காய், கனிகளை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும். அவற்றை விரட்ட முயன்றால் கடிக்க விரட்டுவதும் என பல விதங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும்.

ஆனால், இந்த கருங்குரங்கு அவற்றுக்கு நேர்மாறாக பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் அன்பாக பழகி வருகிறது. அந்த பகுதி மக்களும் பழங்கள், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி அந்த குரங்கிடம் பாசம் காட்டி வருகின்றனர்.

பொதுமக்களோடு அன்பாக பழகும் இந்த விசித்திர கருங்குரங்கு யாராவது ‘செல்பி’ எடுக்க சென்றால் அசராமல் போஸ் கொடுக்கிறது. இதனால், குரங்குடன் ‘செல்பி’ எடுத்து அந்த பகுதி வாலிபர்களும், சிறுவர்களும் குதுகலம் அடைகிறார்கள்.

சமீபகாலமாக அந்த பகுதி சிறுவர், சிறுமிகளின் உற்ற நண்பனாக மாறிய கருங்குரங்கு அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து உலா வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!