அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை திடீர் நீக்கம் – அமெரிக்கா…!


அமெரிக்காவில் நுழைவதற்கு 11 நாடுகளின் அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திடீரென நீக்கி, அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்க நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் அகதிகள் கொள்கையை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் மாற்றி அமைத்தது. அப்போது ஆபத்தான நாடுகள் என்று 11 நாடுகளை கண்டறிந்து, அவற்றில் இருந்து அகதிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த நாடுகள் எவை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவை, எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, வடகொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, ஏமன் என அறியப்படுகிறது.

இந்த நிலையில் 11 நாடுகளில் இருந்து அகதிகள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை திடீரென நீக்கி, அமெரிக்க அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டு உள்ளது.

அதே நேரத்தில் இந்த 11 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர விரும்புகிறவர்கள், அதிகப்படியான பாதுகாப்பு கெடுபிடிகளை சந்திக்க வேண்டியது வரும் என தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கிர்ஸ்ட்ஜென் நீல்சன் கூறும்போது, “அமெரிக்காவினுள் யார் நுழைகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியம்.

எங்கள் அகதிகள் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, மோசமானவர்கள் யாரும் நுழைந்து விடுவதை தடுக்கிற விதத்தில் கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டார். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!