மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்… பின் எடுத்த விபரீத முடிவு..!

தக்கலை அருகே காதல் பிரச்சினையில் பொங்கல் தினத்தன்று வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போக்சோவில் கைதானவர்
தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சி புதுக்காடு வெட்டிவிளையை சேர்ந்தவர் கென்னடி. இவர் கேரளாவில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நிதின் (வயது 22), டிரைவர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மார்த்தாண்டம் மகளிர் போலீசார், நிதினை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மாணவியை காதலித்தார்
பின்னர், இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நிதின், பாலியல் பலாத்காரம் செய்த மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், நிதின் மனமுடைந்த யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.


தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் பொங்கலுக்கு முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்கச் சென்றார். பொங்கலன்று காலையில் வெகுநேரமாகியும் நிதின் அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த அவரது தாயார் ராணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மின்விசிறியில் நிதின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.


ஆஸ்பத்திரியில் போராட்டம்
பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிதினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து நிதினின் தந்தை கென்னடி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்தநிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், நிதினின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், தற்கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் சம்பவ இடத்திற்கு வந்து நிதினின் உறவினர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கிச் சென்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!