நடனமாடி காளையர்களை உற்சாகப்படுத்திய சென்னை மூதாட்டி!

அலங்காநல்லூரில் பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு பஞ்சம் இல்லை என்று கூறும் அளவுக்கு ஜல்லிக்கட்டை பார்க்க வந்தவர்கள் உற்சாகம் பொங்க காணப்பட்டனர்.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.

ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை காண 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மற்ற ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பார்வையாளர்கள் மிகக் குறைவாகவே பங்கேற்க முடிந்தது.

வீரத்துடன் களம் இறங்கும் காளையர்கள், அவர்களை களத்தில் தூக்கி வீசும் காளைகள், காளையர்களை உற்சாகப்படுத்தும் பார்வையாளர்கள் என ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் களம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு பார்வையாளர்கள் குறைவாக இருந்தபோதிலும் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு பஞ்சம் இல்லை என்று கூறும் அளவுக்கு ஜல்லிக்கட்டை பார்க்க வந்தவர்கள் உற்சாகம் பொங்க காணப்பட்டனர். அவர்களில் அனைவரையும் கவர்ந்த ஒரு வி‌ஷயம் ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் மாடத்தில் நடனமாடி ஜல்லிக்கட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய 80 வயது மூதாட்டிதான்.

சென்னை வண்டலூரைச் சேர்ந்த அந்த மூதாட்டியின் பெயர் சுந்தரம்மாள்.

ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதில் ஆர்வம் மிகுந்தவர் மூதாட்டி சுந்தரம்மாள். இதனால் அவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை தவறாமல் நேரில் வந்து பார்த்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டும் வந்த அவர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து ரசித்தார்.

காளைகளின் வேகம், காளையர்களின் வீரம் ஆகியவற்றை பார்த்த மூதாட்டி சுந்தரம்மாளுக்கு உற்சாகம் அதிகரித்தது. அவர் களத்தில் நின்ற வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடனமாடினார். 80 வயதில் உற்சாகமாக அவர் ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!