குண்டர் தடுப்பு சட்டத்தில் சாட்டை துரைமுருகன் கைது!

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்குதங்கும் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவால் வாந்தி பேதி மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோருக்கு பூந்தமல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் தரமற்ற உணவு சாப்பிட்ட பெண் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக ‘யூடியூபில்’ செய்தி பதிவிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழிற்சாலை ஊழியர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கணேசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் தொழிலாளர்களிடம் வீடியோ காலில் கலெக்டர் ஆர்த்தி பேசி அவர்களது உடல்நிலை குறித்து அனைவருக்கும் தெரிவித்தார். இதையடுத்து தொழிலாளர்களின் 16 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

தனியார்நிறுவன ஊழியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் மீது திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சியில் பதுங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருவள்ளூர் போலீசார் கடந்த 19ந்தேதி கைது செய்தனர். அவதூறு செய்தி பரப்புதல், உண்மைக்கு புறம்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செய்தி வெளியிடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில், சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி, திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி
சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!