கிணற்றில் மூழ்கிய மாணவன் உடல் 13 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு!

தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி கிணற்றில் மூழ்கிய மாணவன் உடல் 13 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

கல்லூரி மாணவன்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ஹரி கோகுல கிருஷ்ணன் (வயது 21), கல்லூரி மாணவர். நேற்று முன்தினம் மதியம் கல்லூரி விடுமுறை என்பதால் ஹரி கோகுலகிருஷ்ணன் தன்னுடைய நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து அங்குள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார்.

அப்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கிணற்றின் மேல் பகுதியில் இருந்து குதித்து குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென ஹரி கோகுலகிருஷ்ணன் மீது அவருடைய நண்பர் ஒருவர் குதித்ததாக கூறப்படுகிறது.


தண்ணீரில் மூழ்கினார்
இதில் காயம்பட்ட ஹரி கோகுலகிருஷ்ணன் எதி்ர்பாராதவிதமாக தண்ணீருக்குள் மூழ்கினார். அவருடன் குளித்தவர்கள் ஹரி கோகுலகிருஷ்ணனை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதுபற்றி அறிந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்களும், காரிப்பட்டி போலீசாரும் அங்கு வந்தனர்.


தண்ணீரை வெளியேற்ற முடிவு
கிணறு நிரம்பி இருந்ததால் மாணவன் உடலை மீட்க கிணற்று தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அதற்காக 2 மோட்டார்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற தொடங்கினர். நேற்று காலை 5 மணி அளவில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.


அப்போது கிணற்றுக்குள் ஹரிேகாகுல கிருஷ்ணன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் மாணவர் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


13 மணி நேரம்
மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுத சம்பவம் அந்த பகுதியே சோகமயமானது. 13 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்ட மாணவன் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!